குடிசைப்பகுதியில் 3ம் வகுப்பு மாணவியின் நூலகம் :-
இந்தியாவின், மத்தியப்பிரதேசத்தில் இருக்கும் போபால் நகரில் உள்ள அரேரா குன்று அருகேயுள்ள குடிசைப்பகுதியில் வசிக்கும் 9 வயது சிறுமி முஸ்கான் ஹ்ரிவார். மூன்றாம் வகுப்பில் படிக்கும் முஸ்கான், தனது வீட்டில் நூலகத்தை நிறுவி செயல்படுத்திவருகிறார். அவருக்கு வைஷாலி வாசகர் வட்டத்தின் சார்பாக 50 சிறுவர் கதை புத்தகங்களை பரிசாக அனுப்பிவைக்க முடிவுசெய்துள்ளோம்.
மூன்றாம் வகுப்பில் படிக்கும் முஸ்கான், மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பியதும், வீட்டின் வாசலில் நூறறுக்கும் அதிகமான புத்தகங்களை கடைவிரித்து, அப்பகுதியில் உள்ள எழுத்தறிவில்லாத பிள்ளைகளுக்கு எழுத்தறிவிக்கும் ‘இறைவி’யாக மாறிவிடுகிறார்.
அப்பகுதியில் உள்ள பிரபல தனியார் பள்ளிக்கூடம் ஒன்று நன்கொடையாக அளித்த 25 புத்தகங்களை கொண்டு தனது வீட்டின் வாசலில் கடந்த ஆண்டு ஒரு சிறிய நூலகத்தை முஸ்கான் ஆரம்பித்தார்.
அந்த புத்தகங்களில் உள்ள ராஜா-ராணி கதைகள் மற்றும் நமது தாய்நாட்டின் விடுதலைக்காகவும், முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாறு ஆகியவற்றை கதை வடிவில் தனது மழலை மொழியில் படிப்பறிவில்லாத அப்பகுதி பிள்ளைகளுக்கு கற்பிக்கும் முஸ்கானிடம் தற்போது நூற்றுக்கும் அதிகமான புத்தகங்கள் குவிந்து கிடக்கின்றன.
படிக்க தெரிந்த சில சிறுவர் - சிறுமியர் இந்த கட்டணமில்லாத நூலகத்தில் இருந்து புத்தகங்களை இரவலாக கொண்டுசென்று, வாசித்துவிட்டு, மறுநாள் கொண்டுவந்து திருப்பி தந்துவிட்டு, வேறு புத்தகங்களை கொண்டு செல்கின்றனர்.
வேறு சிலர் முஸ்கான் வீட்டு வாசலிலேயே அமர்ந்து படித்துவிட்டு, ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அவரிடம் விளக்கம் கேட்டு தெளிவு பெறுகின்றனர்.
நன்றாக படித்து, எதிர்காலத்தில் டாக்டராக வேண்டும் என்பதுதான் எனது எதிர்கால இலட்சியம் என்று கூறும் மஸ்கானின் கல்வித் தொண்டை பாராட்டி மத்திய அரசின் சார்பில் விரைவில் இவருக்கு நித்தி ஆயோக் திட்டத்தின்கீழ் ‘சிந்தனை தலைவர்’ பட்டம் வழங்கப்படவுள்ளது, குறிப்பிடத்தக்கது.
இந்த சிறு வயதிலேயே சமூக மாற்றத்துக்காக பாடுபடும் முஸ்கானின் சேவை எங்களை பெருமைப்படுத்தியுள்ளது என இவரது தாயார் திருமதி மாயா அவர்கள் கூறியதை போல ஒவ்வொரு மாணவ மாணவியரும் அவர்களால் முடிந்த அளவில் அவர்களின் வீட்டிலேயே ஒரு நூலகத்தை நிறுவி நாட்டுக்கும் வீட்டிற்கும் பெருமைசேர்க்கவேண்டும்.
நன்றிகளுடன் வைஷாலி வாசகர் வட்டம்.
No comments:
Post a Comment